search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை- கவர்னர் பன்வாரிலால் அதிருப்தி

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமி‌ஷன் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் சூரப்பா. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

    அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.280 கோடி ஊழல் செய்ததாக சூரப்பா மீது குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமி‌ஷனை தமிழக அரசு அமைத்தது. 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து சூரப்பா மீது மேலும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தமிழக அரசு சார்பில் மின்னஞ்சல் முகவரியும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இதற்கான விசாரணை அலுவலகத்துக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவான பொதிகை இல்லம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு நீதிபதி கலையரசனுக்கு உதவியாக கூடுதல் அதிகாரிகள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணியை தொடங்கினார்கள்.

    விசாரணை கமி‌ஷனில் துணைவேந்தர் சூரப்பா ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் சூரப்பா மீதான விசாரணை கமி‌ஷன் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில், ‘‘பல்கலைக்கழக வேந்தரான தனக்கு தெரியாமல் துணைவேந்தர் சூரப்பாவை விசாரிப்பது ஏற்புடையதல்ல. மொட்டைக் கடிதங்களை வைத்து விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளதும், சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்திருப்பதும் நியாயமற்றது. எனவே அவர் மீதான விசாரணையை அரசு கைவிட வேண்டும்.’’

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த வாரம் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். ஆனால் கவர்னரின் இந்த கடிதத்துக்கு தமிழக அரசு சார்பில் இன்னும் பதில் அனுப்பப்படவில்லை என தெரிகிறது.
    Next Story
    ×