search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகள் அடைப்பு
    X
    கடைகள் அடைப்பு

    பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு: மேட்டுப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

    பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து இன்று மேட்டுப்பாளையத்தில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

    மேட்டுப்பாளையம்:

    பில்லூர் மூன்றாவது மற்றும் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டங்களை மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தாமல் பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதி நீரை கொண்டு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மேட்டுப்பாளையம் சிறுமுகை, காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மேட்டுப்பாளையம் அருகே விளாமரத்தூர் பகுதியிலிருந்து தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவும் இன்று மேட்டுப்பாளையத்தில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக குடிநீர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மேட்டுப்பாளையத்தில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

    மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வணிக வளாகம் மற்றும் ஊட்டி மெயின் ரோடு, காரமடை ரோடு, நல்லூர் ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் மற்றும் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து மண்டிகளும் மூடப்பட்டிருந்தன அத்தியாவசிய தேவைக்கு மருந்து கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

    சிறுமுகையில் அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும் மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழு சார்பில் காலை மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×