search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை சிறையில் கைதி திடீர் தற்கொலை - சாவுக்கு மனைவியே காரணம் என பரபரப்பு கடிதம்

    மதுரை மத்திய சிறையில் கைதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். எனது சாவுக்கு மனைவியே காரணம் என குற்றம்சாட்டி அவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மதுரை:

    சில மாதங்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பரணிவளவன்(வயது 33) என்பவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 300 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர் கடந்த அக்டோபர் மாதம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மற்ற கைதிகள் அனைவரும் தூங்கிய பிறகு அங்கிருந்த ஜன்னல் கம்பியில் திடீரென்று பரணிவளவன் லுங்கியால் தூக்குப்போட்டுக் கொண்டார். அந்த நேரத்தில் கண் விழித்த சக கைதிகள் அவரை மீட்டு சிறைகாவலருக்கு தகவல் கொடுத்தனர். உடனே பரணிவளவனை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்போது பரணிவளவன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், “நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட என் மனைவி, ரகுமான் என்பவருடன் சேர்ந்து கொண்டு என்னை ஜாமீனில் எடுக்க மறுத்து வருகிறார். எனது சாவுக்கு மனைவிதான் காரணம். எனது பிணத்தை அவள் பார்க்கக்கூடாது. உடலை எனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய சிறையில் பலத்த காவலுக்கு மத்தியில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×