search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த தினேஷ்.
    X
    இறந்த தினேஷ்.

    கம்பம் அருகே தனியார் தோட்டத்தில் சிறுவன் மர்ம மரணம்

    கம்பம் அருகே தனியார் தோட்டத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் உடல் அருகே 4 வேட்டை நாய்களும் செத்து கிடந்தன.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி தண்ணீர் பாறை பகுதியில், தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தென்னை, வாழை மற்றும் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று காலையில் இந்த தோட்டத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் அருகே 4 வேட்டை நாய்களும் செத்து கிடந்தன. இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு, கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்த சிறுவன் கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த பரமன் மகன் தினேஷ் (வயது 16) என்றும், அவன் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு மாடுகளை வளர்த்து வந்துள்ளான் என்பதும் தெரியவந்தது.

    அந்த தோட்டத்திற்கு அவன் எதற்காக வந்தான்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில் நேற்று முன்தினம் இரவு அவன், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் வினித் (19), வட்டக்கண்ணு (20) ஆகியோருடன் சேர்ந்து 4 நாய்களும் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது.

    அதில் அவனும், வேட்டை நாய்களும் மின்சாரம் பாய்ந்ததில் இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் மின்சார வேலி ஏதும் இல்லை. இந்த நிலையில் அவன் எப்படி மின்சாரம் பாய்ந்து இறக்க முடியும்? என்றும், சிறுவனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவனுடன் வேட்டைக்கு சென்ற 2 பேரையும் பிடித்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்ததால், தினேஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    இதைத்தொடர்ந்து கம்பத்தில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, இறந்து கிடந்த 4 நாய்களின் உடலை பரிசோதனை செய்தனர். அதில், நாய்கள் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்டைக்கு சென்ற சிறுவன் மற்றும் 4 நாய்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×