search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    காதல் விவகாரத்தில் கணவன்-மனைவியை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை

    காதல் விவகாரத்தில் கணவன், மனைவியை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    நெல்லை:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மைப்பாறை நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). அவரது மனைவி தனலட்சுமி (50), மகன் கண்ணன் (35).

    அதே ஊரைச் சேர்ந்தவர் முத்தல்ராஜ் (62). விவசாயியான இவரது மகள் சென்னை காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கண்ணணுக்கும், தனது மகளுக்குமான காதல் விவகாரம் தொடர்பாக ஜெயராமனிடம் முத்தல்ராஜ் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 21.3.2015 அன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்தல்ராஜ் கம்பால் ஜெயராமன், தனலட்சுமி ஆகியோரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயராமன், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்த இரட்டைக்கொலை தொடர்பாக மைப்பாறை கிராம நிர்வாக அலுவலர் பரமசிவன், திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தல்ராஜை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, முத்தல்ராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, குற்றவாளி முத்தல்ராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்தல்ராஜை போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அரசு சார்பில் வக்கீல் ராஜ பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×