search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்

    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் இடையே விரிவாக்கப்பாதையில் அடுத்த 2 வாரத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்களும் வர உள்ளன.

    கடந்த ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜூன் மாதம் ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

    தற்போது பொதுமுடக்கம் தளர்வுகளுக்கு பிறகு பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் புத்தாண்டில் பணிகளை முடித்து பாதுகாப்பு கமிஷனர் ஆய்வுக்கு பிறகு சேவையை தொடங்கவும்திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    விரிவாக்கப்பாதையில் ரெயில் பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டதால் இந்தப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்த முடியும். இம்மாதம் 2-வது வாரத்தில் டீசல் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். தொடர்ந்து ரெயிலையும் இப்பாதையில் இயக்கி பார்க்கப்பட உள்ளது. ரெயில் நிலையங்களின் கட்டுமானம், தொலைத் தொடர்பு மற்றும் சிக்னலிங் அமைப்புகளை நிறுவும் பணி தற்போது நடந்து வருகிறது. ரெயில் மற்றும் நிலையத்துக்கு தேவையான மின்சாரம் 25 கிலோ வாட் என்ற அளவில் கட்டமைப்புகளை நிறுவப்பட உள்ளது. ஜனவரி 2-வது வாரத்தில் இந்தப்பணிகளை முடிக்க இருக்கிறோம்.

    சுரங்க ரெயில் நிலையத்தில் ரெயில் தண்டவாளத்திற்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே அமைக்கப்படும் திரை கதவுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படலாம். கொரோனா தொற்று பரவல் காரணமாக சோதனை மற்றும் சேவை தொடக்கம் தள்ளி போனது. ஜனவரி இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் விரிவாக்க பாதை ரெயில் இயக்கத்துக்கு ஏற்றது என்று சான்றிதழை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வழங்கிய பின்னர், முறையாக புத்தாண்டான ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் இயக்குவதற்காக ரூ.200 கோடியில் 10 மெட்ரோ ரெயில்கள் வாங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    Next Story
    ×