search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்ணாரப்பேட்டை"

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்தினாலும் வாகனங்களின் எண்ணிக்கையினாலும் போக்குவரத்து நெரிசல் என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது.

    75 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அடிப்படையான கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    சென்னையின் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் கூட அதற்கு இன்னும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. வாகனங்களின் அதிகரிப்பு, குறுகலான சாலைகளும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் எதிர்காலத்தில் மக்கள் தொகை, வாகன பெருக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இத்திட்டம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 2 வழித் தடங்களில் நிறைவேற்றப்படுகிறது.

    உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு பாதையிலும் 34 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக தூரம் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் ஓடக் கூடிய நகரமாக சென்னை அமைந்துள்ளது.

    இத்திட்டம் 2008-ம் ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடியில் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக உயர் மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் படிப்படியாக ஓடத் தொடங்கின. தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ சேவை செயல்படுத்தப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையில் ரெயில்களை இயக்குவதற்காக பணிகள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்தன. டிசம்பர்மாத இறுதியில் இந்த சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வருவது தாமதம் ஆனதால் தள்ளிப்போனது.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை ஓட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பார்த்தனர்.

    பயணிகளின் பாதுகாப்பு, அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு செய்து அதில் குறைகள் எதுவும் இருக்கிறதா என்பதை சோதனை செய்தார். ரெயில் நிலையங்களில் உள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.

    முழுமையான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் கமி‌ஷனர் அறிக்கை தாக்கல் செய்வார். அதனை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே சேவை தொடங்கி வைக்கப்படும்.

    இன்னும் 2 வாரத்திற்குள் இந்த வழித்தடத்தில் புதிய சேவை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். சேவை விரைவில் தொடங்க இருப்பதால் இது வடசென்னை மக்களுக்கு மிகவும் பயன்உள்ளதாக இருக்கும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, எண்ணூர் போன்ற பகுதிகளை சார்ந்தவர்கள் மிக எளிதாக விமான நிலையம் சென்றடைய முடியும்.

    மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப்பணி இவற்றுடன் நிறைவடைகிறது. இதன்மூலம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 45 நிமிடத்தில் சென்றடையலாம்.

    மெட்ரோ ரெயிலில் தினமும் வார நாட்களில் 55 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். வார இறுதி நாட்களில் 60 ஆயிரம் பணிகள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரெயில் பயணத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எடுத்து வருகிறது.

    குறைந்த கட்டணத்தில் கார், ஆட்டோ வசதியினை அளித்துள்ளது. மெட்ரோ ரெயில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ஆகவும், அதிக பட்சம் ரூ.70-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டையில் இருந்தும், சென்ட்ரலில் இருந்தும் விமான நிலையம் செல்ல ரூ.70 கட்டணமாகும்.

    சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் (25 கி.மீ.) செல்ல 55 நிமிடம் ஆகிறது. அண்ணாசாலை வழியாக (23கி.மீ.) செல்ல 45 நிமிடத்திற்கு குறைவாக பயண நேரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் எதிர்பார்த்த அளவிற்க கூட்டம் இல்லை. மக்கள் இன்னும் அதிகளவு பயன்படுத்தவில்லை.

    வாகன நெரிசலில் சிக்கி பயணிப்பதால் குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்ல முடியவில்லை என்ற குறை சென்னை மக்களிடம் நிலவி வருகிறது. அந்த நிலையில் இருந்து விடுபடவும், இருசக்கர மற்றும் கார்களின் பயன்பாட்டை நகருக்குள் குறைக்கவும் மெட்ரோ ரெயில் சேவை அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ரெயில் நிலையத்தில் இருந்தும் மாநகர பஸ் வசதி, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார் வசதியும் அளிக்கப்படுகிறது. டென்‌ஷன் இல்லாமல் சொகுசான பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரெயில் உதவி புரிகிறது. கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு பொது மக்களிடம் பொதுவாக இருந்து வருகிறது.

    ஆனால் இத்திட்ட செலவு மற்றும் மற்ற நகரங்களை ஒப்பிட்டுதான் இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நிறைவடைந்து விட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் 40 வருடமாக ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜெயசந்திரன் இன்று மரணமடைந்ததையடுத்து அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #FiveRupeeDoctor #DrJayachandran
    ராயபுரம்:

    சென்னை வண்ணாரப்பேட்டையில் டாக்டர் ஜெயசந்திரன் என்று கேட்டால் பலருக்கு தெரியாது. ஆனால் ‘அஞ்சு ரூபா’ டாக்டர் என்று யாரை கேட்டாலும் அடையாளம் காட்டி விடுவார்கள்.

    அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மக்கள் நல மருத்துவராக வலம் வந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன் (71). உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் இன்று மரணம் அடைந்தார்.

    அவரது உடல் பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகள் சரண்யா, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுகிறார். ஒரு மகன் சரத் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டராகவும் மற்றொரு மகன் சரவணன் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராகவும் இருக்கிறார்கள்.

    ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி. மகப்பேறு மருத்துவ நிபுணர். சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொத்த குடும்பமும் மருத்துவத்துறை சார்ந்த குடும்பம்.

    மருத்துவம் தொழில் அல்ல. அது சேவை. அந்த சேவையை ஆத்மார்த்தமாக செய்பவர்கள் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்கள் என்பதை ஜெயச்சந்திரனின் மறைவு எடுத்துக்காட்டியது.

    டாக்டர் ஜெயச்சந்திரனின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் கொடைப்பட்டினம் கிராமம். 1947-ல் பிறந்த ஜெயச்சந்திரன் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னை அரசு மருத்துவ கல்லுரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் டாக்டர் ஆனதும் டாக்டர் தொழிலுக்கு செல்ல விரும்பவில்லை. மருத்துவ சேவை செய்யவே விரும்பினார். அதனால் ஒரு சிறு கிளினிக்கை தொடங்கினார்.

    தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆரம்பத்தில் வெறும் ரூ.2 மட்டுமே வசூலித்தார். அதையும் அங்குள்ள உண்டியலில் போட சொல்வார். செவிலியர்கள் நியமித்தால் அவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும் என்பதால் அவரே ஊசி போடுவது, மருந்து மாத்திரைகள் எடுத்து கொடுப்பது போன்ற வேலைகளையும் கவனித்தார்.

    அவரது சேவையால் ஈர்க்கப்பட்டு பகுதிநேரமாக வந்து உதவி செய்து சென்ற செவிலியர்களும் உண்டு. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மவுசு குறைந்ததை தொடர்ந்து நோயாளிகள் வற்புறுத்தியதால் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தினார். கடைசி காலம் வரை அதே கட்டணத்தையே வாங்கிவந்தார்.

    அவரது மருத்துவ சேவைக்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்தனர். அந்த பகுதியில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் ஏராளம் நடத்தி இருக்கிறார்.

    டாக்டர் ஜெயச்சந்திரனின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருக்கும். அதிலும் கிராமப்புற மற்றும் குடிசை பகுதி ஏழைகள் தான் அதிக அளவில் இருப்பார்கள். புறநகர் பகுதிகளில் இருந்தும் பஸ்களில் பலர் வருவார்கள்.



    இன்று அவரது மரண செய்தி அறிந்து ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

    சேவையால் மக்கள் மனதில் இடம்பிடித்த அஞ்சு ரூபாய் டாக்டருக்கு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். #FiveRupeeDoctor #DrJayachandran

    வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 35 மெட்ரோ ரெயில்கள் 5 நிமிடத்துக்கு ஒரு முறை விரைவில் இயக்கப்பட உள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ்.வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூர சுரங்க வழித்தடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

    இந்த வழித்தடத்தில் எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், மண்ணடி, ஐகோர்ட்டு, வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் குறித்து ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் இறுதி கட்ட ஆய்வு நடத்துகிறார்.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு கமி‌ஷனர் ஒப்புதல் அளித்ததும் வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

    வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 35 மெட்ரோ ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. நெருக்கடியான நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை ரெயில்கள் இயக்கப்படும். இதில் 45 கி.மீட்டர் தூரத்துக் கான வழித்தடப் பாதையில் ரெயில்கள் ஓடும். #MetroTrain
    வண்ணாரப்பேட்டையில் சிறுவனை அரிவாளால் வெட்டிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் சந்துரு (வயது7). 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இவன் நேற்று மாலை தனது உறவினருடன் கடைக்கு சென்று விட்டு கோதண்டராமன் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான்.

    அப்போது அந்த வழியாக ஓடி வந்த 2 வாலிபர்கள் சிறுவன் சந்துருவின் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். அவன் உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை வெட்டியதாக தண்டையார்பேட்டை சேசாலையப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹேமந்த் (18), சேனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சபேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இருவரும் தாம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    மாணவர்கள் ஹேமந்த், சபேசுக்கும் சக மாணவரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. சபேஷ் மீது சூர்யா தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    எனவே சூர்யாவை வெட்டுவதற்காக சபேசும், ஹேமந்தும் அரிவாளுடன் விரட்டி வந்தனர். அப்போது சூர்யா அங்குள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டார்.

    இதனால் ஆத்திரமாக இருந்த அவர்கள் ரோட்டில் நடந்து வந்த சிறுவன் சந்துருவை வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹேமந்த், சபேசிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலுமான மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். தேனாம்பேட்டை வரையிலும் இன்னும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்த 2 வழிகளில் மட்டும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

    இந்த 2 வழித்தடத்திலும் அனைத்து பணிகளையும் முடித்து டிசம்பர் இறுதியில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் இன்னும் ஒரு சில பணிகள் நிறைவடையவில்லை.

    அண்ணா சாலையில் இன்னும் நிறைய கட்டுமானப் பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. 2 மாதத்தில் இந்த பணிகள் முடிவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பாக சோதனை ஓட்டம் குறிப்பிட்ட காலம் வரை நடத்தப்பட வேண்டும்.

    சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதில் உள்ள குறைகளை சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும். தற்போது சோதனை நடத்த வேண்டிய இந்த 2 வழித்தடமும் மிக முக்கியமான பகுதியாகும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.க்கும் இடையே கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிக்னல் சாப்ட்வேர் கருவிகள் வெளிநாட்டில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் சோதனை ஓட்டம் தள்ளிப் போகிறது.

    கடந்த மாதம் நடைபெற வேண்டிய சோதனை ஓட்டம் தொடங்க முடியாமல் அடுத்த மாதம் நவம்பருக்கு தள்ளி செல்கிறது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறுகையில், வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப கருவிகள் வருவதில் தாமதம் ஆகி வருகிறது. அடுத்த மாதம் அக்கருவிகள் வரும் என்று நம்புகிறோம். கருவிகள் வந்தவுடன் சோதனை ஓட்டம் தொடங்கும். தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய சிக்னல் சாப்ட்வேர் கருவிக்காக காத்திருக்கிறோம் என்றனர். #MetroTrain
    மாங்காடு மற்றும் வண்ணாரப்பேட்டையில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடை அடுத்த அம்பாள்நகர் பாலாஜி அவென்யூவில் வசித்து வருபவர் ரமேஷ். பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர். கடந்த 21-ந் தேதி ரமேசும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரிந்தது. இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாங்காடை அடுத்த கோவூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், சாப்ட்வேர் என்ஜினீயர். கடந்த 22-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு சென்றார்.

    இன்று காலை திரும்பி வந்த போது கழிவறையின் ஜன்னல் உடைந்து கிடந்தது. அதன் வழியாக புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டிச் சென்று விட்டனர்.

    பழைய வண்ணாரப்பேட்டை, பாலசுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் சலீம், டெய்லர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார்.

    மாலையில் திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ. 22 ஆயிரம் ரொக்கம், 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். #tamilnews
    வண்ணாரப்பேட்டை மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். #chennaimetrotrain

    சென்னை:

    மெட்ரோ ரெயில் தலைமை பொது மேலாளர் வி.கே.சிங், இயக்குனர் நரசிம்ம பிரசாத் ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்ட்ரல், எழும்பூர் மற்றும் டி.எம்.எஸ் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதை தொடர்ந்து பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இலவச பயணம் அறிவிக்கப்பட்டதால் மக்கள் உற்சாகமாக பயணம் செய்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    கட்டணத்தை நாங்கள் குறைக்க முடியாது. இதற்கான ஆணையம் தான் முடிவு செய்யும். 5 நாட்கள் எந்தவித அசம்பாவித சம்பவமும் இல்லாமல் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்தனர். மெட்ரோ ரெயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    ஒவ்வொரு நிலையத்திலும் 50 முதல் 60 வரை சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பெண் பயணிகள் பாதுகாப்பு அவசியம் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்.

    சென்னையில் சுரங்கப் பாதையும், ரெயில் நிலையங்களும் அதிகம் உள்ளதால் மற்ற நகரங்களை விட திட்டச் செலவு அதிகமாகும். அதனால் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக உள்ளது.

    வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ்., ஏ.ஜி ஆபிஸ் வரையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வருடஇறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சேவை தொடங்கும். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் விரிவாக்க திட்டப் பணிகள் எல்லாம் முடிந்து முழுமையான மெட்ரோ ரெயில் சேவை 2020 மார்ச் மாதம் நடைபெறும்.

    2வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித் தடங்களில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டு செயல் படுத்தும் போது மெட்ரோ ரெயிலில் தினமும் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #chennaimetrotrain

    சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை முன்னிட்டு, மின்சார ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை முன்னிட்டு, மின்சார ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மின்சார ரெயில் சேவையில் கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு ஆவடி நோக்கியும், பிற்பகல் 1.05 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், பிற்பகல் 1.50 மணிக்கு பட்டாபிராம் நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    அதேபோல ஆவடியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து பகல் 12.35 மணிக்கு ஆவடி நோக்கியும், திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், திருவள்ளூரில் இருந்து காலை 11.05 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்களும் இன்று ரத்து செய்யப்படுகின்றன.

    திருவள்ளூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் பயணிகள் ரெயிலாக அங்கிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பட்டாபிராம் நோக்கி புறப்படும்.

    கடம்பத்தூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும், ஆவடி- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும் வியாசர்பாடி ஜீவா- சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, மூர்மார்க்கெட்டுக்கு மாற்று வழிப்பாதையில் செல்லும்.

    சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு திருத்தணி நோக்கியும், பிற்பகல் 2.30 மணிக்கு அரக்கோணம் நோக்கியும், பிற்பகல் 2.45 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கியும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×