search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    நீர்ப்பாசன திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்- குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

    தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்ட நீர் பாசன கால்வாய் திட்டங்களை செயல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஓரளவிற்கு பருவமழை பெய்த போதும் பெரும்பாலான ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு உள்ளன. எனவே ஏரிகளுக்கு மழைநீர் வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-

    எண்ணேகொல் புதூர்-தும்பலஅள்ளி அணை இணைப்பு கால்வாய் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற தர்மபுரி மாவட்டத்தில் நில எடுப்பிற்கு சுமூக தீர்வு எட்டப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசிடம் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது. ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி -2-க்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்வதற்காக ரூ.450 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் கணேசன், தோட்டக்கலைதுறை துணை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×