search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருச்சியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட 918 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும். விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் நேற்று அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

    இதையொட்டி திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன்பிருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக பெரம்பிடுகு முத்திரையர் சிலை ரவுண்டானா நோக்கி வந்தனர். எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகி ஜோசப் நெல்சன் தலைமையில், சி.ஐ.டி.யு. நிர்வாகி ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி சுரேஷ், ஐ.என்.டி.யு.சி. துரைராஜ் மற்றும் எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு., எம்.எல்.எப். எல்.எல்.எப் ஆகிய தொழிற்சங்கத்தினருடன் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அவர்களை மேலும் முன்னேற விடாமல் போலீசார் தடுத்தனர். பின்னர், ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட 85 பெண்கள் உள்பட 675 பேரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறையில் திண்டுக்கல் சாலையில் உள்ள ரவுண்டானா அருகே தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்காக கோவில்பட்டி சாலையில் இருந்து ஊர்வலமாக ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் கையில் திருவோடு ஏந்திக் கொண்டும், மற்றொருவர் கத்திரிக்காயை மாலையாக அணிவித்துக் கொண்டும் கோசங்கள் எழுப்பிக் கொண்டே வந்தனர். இதே போல் பஸ் நிலையம் அருகேயும் சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம் 183 பேர் கைது செய்யப்பட்டனர். துவரங்குறிச்சி பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜீயபுரம் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட விவசாய சங்க செயலாளர் அயிலை சிவசூரியன்தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வினோத் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மண்ணச்சநல்லூர்எதுமலை பிரிவுரோட்டில் சி.ஐ.டி.யு. ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலும், தா.பேட்டை கடைவீதியில் விவசாயசங்க ஒன்றியசெயலாளர் கே.சேகர் தலைமையிலும், முசிறி கைகாட்டியில் மாதர் சங்க நிர்வாகி லிங்கராணி தலைமையிலும், புள்ளம்பாடியில் விவசாய தொழிலாளர் சங்க மத்தியகுழு உறுப்பினர் சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    துறையூர் பஸ் நிலையம் முன் திருச்சி புறநகர் மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட தலைவர் பூமாலை தலைமையிலும், திருவெறும்பூர் கடைவீதியில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுபோல் உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகேவும், தொட்டியத்திலும், வையம்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    மாவட்டம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், ஆப்ரேட்டர்கள்-துப்புரவு பணியாளர் சங்கம், சாலை போக்குவரத்து, சுமை தூக்குவோர் சங்கம், கட்டுமான சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×