
மெரினாவில் கடலை ரசிக்க வருபவர்களை போலீசார் விரட்டி அடித்தபடி உள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளதாலும், கொரோனா பிரச்சினையாலும் பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மெரினா இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மாநகர பஸ்சை விட்டு இறங்கிய 2 பேர் தூக்க முடியாமல் சாக்கு மூட்டை ஒன்றை கஷ்டப்பட்டு தூக்கிச் சென்றனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாக்குமூட்டையில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. சாக்குமூட்டையில் இருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ரவிகுமார் (வயது 49), நாகேஸ்வரராவ் (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.