search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவர் புயல் பாதிப்பு மீட்பு பணிகளுக்காக தயாராக உள்ள ராணுவ வீரர்களை படத்தில் காணலாம்.
    X
    நிவர் புயல் பாதிப்பு மீட்பு பணிகளுக்காக தயாராக உள்ள ராணுவ வீரர்களை படத்தில் காணலாம்.

    புயல் பாதிப்பு - மீட்பு பணியில் இறங்கிய முப்படை வீரர்கள்

    புயல் பாதிப்பு மீட்பு பணிக்காக தமிழகத்தில் முப்படை வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பு மிகுந்த அளவில் இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பு மீட்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய ராணுவம், கப்பல்படை, விமானப்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் இருந்து ராணுவ குழுக்களும் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் சென்னையில் 100 வீரர்கள் கொண்ட 5 கடலோர காவல் படை குழுக்களும், மண்டபத்தில் இரு கடலோர காவல் படை குழுக்களும் முகாமிட்டு உள்ளன. மேலும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 2 உயிர் பாதுகாப்பு படகுகளுடன், தலா 10 பேர் கொண்ட 8 குழுக்களும் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன. மேலும் திருச்சியில் ஒரு உயிர் பாதுகாப்பு படகுடன் தலா 10 பேர் கொண்ட 6 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதைப்போல் புதுச்சேரியில் 8 ராணுவ குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

    இந்திய கடற்படையை சேர்ந்த 10 வெள்ள மீட்பு குழுக்களும் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த பட்டியலில் சென்னையில் 5 வெள்ள மீட்பு குழுவுடன் ஒரு மருத்துவ குழுவும், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கடற்படை தளங்களான பருந்து, கட்டபொம்மன், ராஜாளியில் தலா ஒரு வெள்ள மீட்பு குழுக்களும் மீட்பு பணி உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜோதி என்ற கடற்படை கப்பலும், மீட்பு பணிக்காக தேவைப்படும் இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளது.

    மேலும் இந்திய விமானப்படையை சேர்ந்த 8 ஹெலிகாப்டர்கள், புயல் கரையை கடந்ததும் நிவாரணப்பணிக்காக அனுப்பப்பட தயாராக நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்கள், பெங்களூரு, சூலூரில் தலா இரண்டும், சூலூரில் ஏ.எல்.எச். ரக ஹெலிகாப்டர்கள் இரண்டும், தாம்பரத்தில் ‘செட்டாக்’ ரக ஹெலிகாப்டர்கள் இரண்டும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிவாரண பொருட்களுடன் 4 கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் புயல் பாதிக்கப்படும் இடங்களுக்கு சீரிய கடல் அலையிலும் செல்லும் விதமாக தயார் நிலையில் இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×