search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கறிஞர் ஸ்டிக்கர்
    X
    வழக்கறிஞர் ஸ்டிக்கர்

    வாகனங்களில் வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டும் குற்றவாளிகள் -உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

    வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
    மதுரை:

    பொதுமக்கள் தங்கள் தொழில்சார்ந்த ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக போலீஸ், நீதிபதி, வழக்கறிஞர், ஊடகம், டாக்டர், நீதிமன்றம் என ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு தங்களை அடையாளப்படுத்துகின்றனர். அதேசமயம் பலர் தங்கள் தொழில்களுக்கு சம்பந்தம் இல்லாத ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனங்களில் வலம் வருவதை காண முடிகிறது. கவுரவத்திற்காகவும், வாகன சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். இதனை போலீசார் பலமுறை கண்டறிந்து எச்சரித்துள்ளனர். 

    அவ்வகையில் அனுமதியின்றி வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ஸ்டிக்கர்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

    ‘குற்றச் செயல்களில் ஈடுபடும் பலர் தப்பிப்பதற்காக வழக்கறிஞர் மற்றும் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். எனவே, வாகனங்களில் அனுமதியின்றி வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி டிஜிபி, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் அரசு சட்ட பல்கலைக்கழக முதல்வர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
    Next Story
    ×