search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாநகரில் கூட்டமாக திரியும் நாய்களை படத்தில் காணலாம்.
    X
    திருச்சி மாநகரில் கூட்டமாக திரியும் நாய்களை படத்தில் காணலாம்.

    குழந்தைகள் விளையாடும் தெருக்களில் கூட்டம், கூட்டமாக திரியும் நாய்கள்

    திருச்சி மாநகர பகுதியில் குழந்தைகள் விளையாடும் தெருக்களில் கூட்டம், கூட்டமாக நாய்கள் திரிவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதிகளில் குழந்தைகள் விளையாடும் தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 4 கோட்டங்களில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இந்த அனைத்து வார்டுகளிலும் தற்போது பாரபட்சம் இல்லாமல் தலையாய பிரச்சினையாக உருவெடுத்து இருப்பது நாய்கள் தொல்லையாகும். முன்பெல்லாம் ஒரு தெருக்களில் ஒன்றிரண்டு நாய்கள், அதிகபட்சம் 5 நாய்கள் சுற்றித்திரியும். ஆனால் இப்போது எல்லா தெருக்களிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன.

    உறையூர், தில்லைநகர், பாலக்கரை, பீமநகர், காந்திமார்க்கெட், கே.கே.நகர், அரியமங்கலம் என அனைத்து பகுதிகளிலும் நாய்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோர்களையும், அதிகாலையில் நடைபயிற்சி செல்வோரையும் கூட்டமாக விரட்டி சென்று கடிக்க பாய்கின்றன. இதனால் பயந்து கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடும் தெருக்களில் தற்போது அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிவது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    ஒரு சில தெருக்களில் மாலை நேரங்களில் குழந்தைகள் ஓடி பிடித்து விளையாடி வருகிறார்கள். இப்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படாததால் காலை, மாலை என அனைத்து நேரங்களிலும் தெருக்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடி வருகிறார்கள். அதுபோன்ற தெருக்களில் கூட்டம், கூட்டமாக திரியும் நாய்கள் ஆக்ரோஷமாக குரைத்து கொண்டு ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு கொண்டு பாய்ந்து வருகின்றன. இதனை பார்க்கும் தெருவாசிகள் குழந்தைகளை கடித்து விடுமோ? என அச்சம் கொண்டு ஓடி சென்று குழந்தைகளை தூக்குகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருமண்டபம் பகுதியில் கன்றுக்குட்டி ஒன்றை நாய்கள் கடித்து குதறின. சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதில் 2 ஆடுகள் செத்தன.

    இதேநிலை தொடர்ச்சியாக நீடித்தால் எங்கேயாவது ஒரு இடத்தில் அசம்பாவித சம்பவம் நடந்து விடக்கூடும். நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உறையூர் கோணக்கரை சாலையில் நாய்கள் கருத்தடை மையம் புதிதாக தொடங்கப்பட்டது. ஆனாலும் மாநகரில் நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாநகரில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதற்கு உரிய தீர்வு காணப்படாமல் உள்ளது.

    ஆகவே ஏதேனும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சுதாரித்து கொண்டு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்களில் அபாயகரமான சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், ஒரு சில நாய்கள் வினோதமான நோய்களுடன் அதன் உடலில் பல்வேறு மாற்றங்களுடன் அருவருப்பான நிலையில் சுற்றித்திரிகின்றன. அப்படிப்பட்ட நாய்களையும் பிடித்து குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    Next Story
    ×