search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் மெகராஜ்
    X
    கலெக்டர் மெகராஜ்

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் இடைநிலை மூலதன கடன்- கலெக்டர் தகவல்

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாக்கி, அவர்களை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்திலும் மேம்பட செய்வதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் தொடங்க இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல்நிதி வழங்கும் திட்டங்களை அறிவித்தார். இந்த 3 திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்குவதில், தேசிய அளவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்கிறது.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கியவுடன், அந்நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிக்க ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.

    பொதுவாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன், வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகளுக்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசே வழங்கும்.

    தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல், 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தினை, 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் பங்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுனங்கள் தங்கள் மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×