search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தென்னந்தோப்பில் பதுக்கிய 4 டன் வெடிபொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது

    போடி அருகே தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 4 டன் வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    போடி:

    தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி அணைக்கரைப்பட்டி தங்கப்பாலம் அருகே, வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

    அப்போது அணைக்கரைப்பட்டி தங்கப்பாலம் அருகே ஒரு தென்னந்தோப்பில் உள்ள மோட்டார்அறையை போலீசார் சோதனையிட்டனர். அங்கு 15 அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது, 3 டன் வெடி மருந்து மற்றும் ஒரு டன் டெட்டனேட்டர்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போடி துரைராஜபுரத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளரான முருகப்பா (வயது 53) மற்றும் ஊழியர்கள் குமரேசன் (45), பெருமாள் (40) ஆகியோர் உரிய அனுமதியின்றி வெடிபொருட் களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×