search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மது, புகையிலை பழக்கத்தால் தோல்நோய் அதிகரிக்கும் - ஐகிரவுண்டு டீன் தகவல்

    ‘மது, புகையிலை பழக்கத்தால் தோல்நோய் அதிகரிக்கும்‘ என்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக தோல்நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தோல்நோய் சிகிச்சை பிரிவு கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

    தோல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நிர்மலாதேவி தலைமை தாங்கினார். டீன் ரவிச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து கையேட்டையும் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தோல்நோய் என்பது ஒரு தொற்று நோய் கிடையாது. இந்த நோய் பாதித்தவர்களை தொடுதல், அவர்களிடம் பழகுவதால் மற்றவர்களுக்கு நோய் பரவாது. ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் விடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரை தோல் நோய்க்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு தோல்நோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு புறஊதா கதிர் சிகிச்சையும், நோய் முற்றியவர்களுக்கு உயிரி மருந்துகளும் அளித்து நோய் குணப்படுத்தப்படுகிறது. இந்த உயிரியியல் மருந்துகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு ஆகும். ஆனால் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    தோல் நோய் ஏற்பட்டவர்கள் தாமாகவே மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. இலைகளை அரைத்து பூசும் போது அதில் உள்ள அமிலத்தன்மை நோயின் தன்மையை அதிகரிக்கும். அதே போல் வலிநிவாரண மாத்திரைகள், மது, புகையிலை பழக்கமும் தோல்நோயை அதிகப்படுத்தும். எனவே தோல்நோய் அறிகுறி காணப்படுகிறவர்கள் உடனடியாக தோல்நோய் டாக்டர்களை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சாந்தாராம், மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தோல்நோய் டாக்டர்கள் சங்க தலைவர் மகாகிருஷ்ணன், துணை கண்காணிப்பாளர் அலெக்ஸ் ஆர்தர் எட்வர்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் சிவாயதேவி வரவேற்றார். முடிவில் டாக்டர் ஜூடித்ஜாய் நன்றி கூறினார். உதவி பேராசிரியர் மாலிக் பாபு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×