search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நாகர்கோவிலில் மொபட் மீது மினி பஸ் மோதல்: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி

    நாகர்கோவிலில் மொபட் மீது மினி பஸ் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.
    மேலகிருஷ்ணன்புதூர்:

    நாகர்கோவில் பறக்கை அருகே புல்லுவிளை நடுத்தெருவில் வசித்தவர் குமரேசலிங்கம் (வயது 67). இவர் ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி.

    நேற்று காலை குமரேசலிங்கம், மனைவி ராஜேஸ்வரியுடன் என்.ஜி.ஓ. காலனிக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது மொபட்டுக்கு முன்னால் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. புல்லுவிளையில் வரும் போது மினி பஸ்சை டிரைவர் திடீரென்று பின்னோக்கி எடுத்ததாகவும், அது மொபட் மீது மோதியது. இதில் குமரேசலிங்கம் தவறி கீழே விழுந்தார். அவர் தொடையின் மீது மினி பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குமரேசலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    அதே சமயம் ராஜேஸ்வரி சிறிது தூரம் தள்ளி விழுந்ததால் காயமின்றி தப்பினார். ஆனால் அவர் கண் முன் குமரேசலிங்கம் இறந்ததை பார்த்து கதறி அழுதார். குமரேசலிங்கம்-ராஜேஸ்வரி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குமரேசலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் விசாரணை நடத்தி மினி பஸ் டிரைவர் நெல்லை மாவட்டம் சங்கனாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வேல் முருகனை (33) கைது செய்தார்.
    Next Story
    ×