search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    பஸ்சில் முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம்

    திண்டுக்கல்லில் பஸ்சில் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், திண்டுக்கல்லில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மக்கள் மிகவும் நெருக்கமாக அமர்ந்தும், நின்றும் பயணம் செய்கின்றனர். இதுதவிர ஒருசிலர் கொரோனாவை முற்றிலும் மறந்து, சிறிதும் அச்சமின்றி முககவசம் கூட அணியாமல் நடமாடுகின்றனர். பொதுமக்களின் அதுபோன்ற செயல்பாடுகள் மீண்டும் கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் அபாயம் உள்ளது.

    எனவே மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து உள்ளாட்சி அமைப்பினர், சுகாதாரத்துறையினர் இணைந்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது பஸ்களில் சிலர் முககவசம் அணியாமல் அமர்ந்து இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அதேபோல் பஸ்நிலையத்தில் முககவசம் அணியாமல் காத்திருந்த பயணிகள், கடைக்காரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் பஸ் பயணிகளிடம் மட்டும் ரூ.1¼ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
    Next Story
    ×