search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமராஜா
    X
    விக்கிரமராஜா

    தமிழகத்தில் அனைத்து சந்தைகளை முழுமையாக திறக்க வேண்டும்- விக்கிரமராஜா வலியுறுத்தல்

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளை முழுமையாக திறக்க வேண்டும் என ஏ.எம்.விக்கிரமராஜாவும், பி.ஆர்.பாண்டியனும் தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவும், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனும் சேர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தீபாவளிக்கு பிறகு தமிழ்நாட்டை 5 மண்டலங்களாக பிரித்து விவசாயிகளையும், வணிகர்களையும் ஒன்றிணைத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டங்களின் பாதிப்புகளையும், நெருக்கடிகளையும் எடுத்துரைக்க உள்ளோம். அதன்மூலம், ஒத்த கருத்தை உருவாக்கி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாதிப்புகளை எடுத்துரைப்பது என்று முடிவு செய்துள்ளோம். அதனை மறுக்கும் பட்சத்தில் தீவிரமான போராட்டத்தில் களம் இறங்குவது என முடிவு எடுத்திருக்கிறோம்.

    கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ஆசியாவிலேயே புகழ்பெற்ற சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. மேலும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மொத்த வியாபார சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.

    கடந்த மாதம் ஒரு சில மொத்த வியாபார கடைகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் அனைத்து வணிகர்களும் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதற்கான அனுமதி கொடுக்க வேண்டும்.

    இது ஏதோ வணிகர்களுக்கு மட்டும் வருவாயை இழக்க கூடிய நடவடிக்கை அல்ல. தமிழகத்தில் சுமார் 22 மாவட்டங்களில் உற்பத்தி செய்ய கூடிய காய்கறிகள், பழ வகைகள் விற்பனை செய்யக்கூடிய புகழ்மிக்க சந்தையாக கோயம்பேடு விளங்குகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து இந்த சந்தை மூலம் சந்தை படுத்தக்கூடிய விவசாய உற்பத்தி பொருட்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளும் பேரிழப்பை சந்தித்துள்ளனர்.

    எனவே தமிழக முதல்- அமைச்சர் வணிகர்கள், விவசாயிகள் கருத்தை கேட்டு கோயம்பேடு உள்ளிட்ட தமிழகத்தில் செயல்படக்கூடிய அனைத்து சந்தைகளையும் முழு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் கூட்டியக்க நிர்வாகிகளோடு சந்தையை திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
    Next Story
    ×