search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலத்தில் பெண்களிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் கைது

    சேலத்தில் பெண்களிடம் நகை பறித்த திருச்சியை சேர்ந்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாநகருக்கு உட்பட்ட அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்லும் பெண்கள் மற்றும் வீட்டு முன்பு கோலமிடும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கமலா என்ற பெண் அந்த பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்புறம் உட்கார்ந்து இருந்த வாலிபர் கமலாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கமலா அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் யாஸ்மின், இன்ஸ்பெக்டர்கள் குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் கொள்ளையர்கள் 2 பேர் உருவம் தெரிந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது திருடர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று கொள்ளையடிப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பது தெரிந்தது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருச்சியில் கண்காணித்து வந்தனர்.

    அப்போது கமலாவிடம் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கு பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த பிராங்ளின் (வயது 33) அவரது கூட்டாளி மகேஸ்வரன் (29) என்பது தெரியவந்தது. இருவரும் சேலத்தில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 16 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் இருவரையும் சேலம் சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையர்கள் இருவரும் திருச்சியில் வெவ்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி திருச்சி சிறையில் இருக்கும்போது அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த இருவரும் ஒன்று சேர்ந்து சேலத்தில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    Next Story
    ×