search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர் நீதிமன்ற மதுரை கிளை
    X
    உயர் நீதிமன்ற மதுரை கிளை

    எதிர்ப்பு தெரிவித்தால்தான் தமிழ் மொழியை சேர்ப்பீர்களா? -மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

    தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழி ஏன் முதலிலேயே சேர்க்கப்படவில்லை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    மதுரை:

    மத்திய அரசின் தொல்லியல் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இதற்கு தமிழக தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்பின்னர் தமிழ் மொழியை சேர்த்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், தொல்லியல் துறை படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழியை சேர்க்காமல் விட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். 

    அப்போது, தொல்லியல் துறை படிப்புக்கான அறிவிப்பில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

    நீதிபதிகள் கூறியதாவது:-

    தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால்தான் தமிழ் சேர்க்கப்படுமா? தொல்லியல் துறை அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழி ஏன் முதலிலேயே சேர்க்கப்படவில்லை? மொழிகள் மனிதர்களின் உணர்வுகளோடு தொடர்புடையவை. எந்த அடிப்படையில் தொல்லியல் துறை அறிவிப்பில் பாலி, பாரசீக மொழிகள் சேர்க்கப்பட்டன. 

    தமிழை தவிர்த்துவிட்டு தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றி அக்டோபர் 28ம் தேதிக்குள் தொல்லியல் துறை பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×