search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 வீடுகள் எரிந்து நாசம்

    திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் எரிந்து நாசமாயின.
    திருச்சி:

    திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரில் குடிசைகள் மற்றும் ஆஸ்பெஸ்டாசால் வேயப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் செல்வராஜ் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று அதிகாலை 2.45 மணிக்கு, செல்வராஜ் வீட்டில் இருந்து ‘டமார்’ என்ற சத்தத்துடன் கரும்புகை வெளியேறியது. பின்னர் வீட்டில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. அதிகாலை என்பதால், பக்கத்து வீடுகளில் உள்ள அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். தீப்பிடித்து எரிவதை கண்ட சிலர் திடுக்கிட்டு எழுந்து அலறியடித்தபடி வீட்டைவிட்டு வெளியேறி ரோட்டுக்கு சென்றனர். அந்த தீ மளமளவென பக்கத்து கூரை வீடுகளிலும் பரவி எரியத் தொடங்கியது.

    தகவல் அறிந்ததும் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்கள், ஸ்ரீரங்கம், நவல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து தலா 1 வாகனம் என மொத்தம் 5 வாகனங்களில் 40 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 2½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் 16 பேரின் வீடுகள் தீக்கிரையானது. தீ விபத்தில் வீடுகளில் இருந்த இரும்பு பீரோ, கட்டில், டி.வி. மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார் சைக்கிள், மாணவ-மாணவிகளின் புத்தகங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து பாலக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், பூட்டப்பட்டு இருந்த செல்வராஜ் வீட்டில் உள்ள சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறியதாலும், மின்கசிவு காரணமாகவும் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
    Next Story
    ×