search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எக்ஸ்பிரஸ் ரெயில்
    X
    எக்ஸ்பிரஸ் ரெயில்

    மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் இயக்க முடிவு- தென்மேற்கு மண்டல ரெயில்வே அனுமதி

    தென்மேற்கு ரெயில்வே மண்டலத்தின் மைசூர் கோட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    கொரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால், ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 60 சதவீத பஸ்களும், குறிப்பிட்ட சில ரெயில்களும் மட்டும் இயக்கப்படுகிறது. ஆனால், பிறமாநிலங்களில் ரெயில் சேவை பெரும்பாலும் தொடங்கி விட்டது. ஆனால், அந்தந்த மாநிலங்களின் அனுமதி பெற்று ரெயில்கள் இயக்குவதில் சிரமங்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு ரெயில்வே மண்டலத்தில் உள்ள மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, தென்மேற்கு மண்டல ரெயில்வேயில் ஏற்கனவே கர்நாடக மாநிலத்துக்குள் அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பிற மாநிலங்களுக்கான ரெயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்துக்கு சென்னை, மாயவரம் மற்றும் தூத்துக்குடிக்கு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரெயில்வேயின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த ரெயில்சேவை உடனடியாக தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வே மண்டலத்தில் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து சென்னை சென்டிரல் வரை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, தற்போது தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடி மற்றும் பெங்களூரு,மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டாலும் சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் ஓடத்தொடங்கினால் மதுரை கோட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் முதல் ரெயில் தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இருக்கும். மேற்கு ரெயில்வே சார்பிலும் நெல்லைக்கு ரெயில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, நெல்லையில் இருந்து வாரம் இருமுறை குஜராத் மாநிலம் ஹாப்பாவிற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை மறுபடியும் இயக்க மேற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது. இந்த ரெயிலும் விரைவில் ஓடத்தொடங்கும் என தெரிகிறது.
    Next Story
    ×