search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் - 30 பேர் கைது

    ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பார்க்கச்சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இதனை கண்டித்தும், உ.பி. அரசின் அராஜகப்போக்கை கண்டித்தும் தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை விழுப்புரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், மாநில இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன், மாவட்ட சேவாதள பிரிவு தலைவர் ராஜேஷ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், காஜாமொய்தீன், செய்தி தொடர்பாளர் அகமது, பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், துணைத்தலைவர் குப்பன், பொதுச்செயலாளர்கள் சேகர், சீனு, நகர துணை தலைவர் பூக்கடை சோமு, நிர்வாகிகள் வாசுதேவன், மணிகண்டன், சிவாஜி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இவர்கள் அனைவரும், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பியபடி திடீரென விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உத்தரப்பிரதேச அரசையும், போலீசாரையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பியபடி அம்மாநில முதல்வரின் படத்தை கிழித்து எறிந்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 30 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×