search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரி வழியாக கேரளாவுக்கு கடத்திய 5.5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

    குமரி வழியாக கேரளாவுக்கு கடத்திய 5.5 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்துறை அதிகாரிகள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாரும் கண்காணிப்பு பணியை மேற் கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் இன்று காலை பளுகல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரி முழுவதும் காய்கறிகள் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் காய்கறிகளை அப்புறப்படுத்திவிட்டு சோதனை செய்தனர்.

    சாக்கு மூட்டைகளில் ரே‌ஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. லாரியில் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கப்பணமும் இருந்தது. இதையடுத்து போலீசார் பணத்தையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. லாரியில் இருந்த ராசு, பாஸ்கர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசியை கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.

    போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசியையும், லாரியையும் நாகர் கோவிலில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ரே‌ஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×