search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய போது எடுத்த படம்.
    X
    இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய போது எடுத்த படம்.

    ராமநாதபுரத்தில் ரூ.73 கோடியில் நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

    ராமநாதபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேருக்கு ரூ.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    ராமநாதபுரம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணி அளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    இதையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மணிகண்டன், சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஏ.முனியசாமி, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன், ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர், அங்கு சிறப்பு மேடையில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து வேளாண்மை துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை, வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் சார்பில் ரூ.70 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான 220 திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதனை தொடர்ந்து ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, கருவூலகத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை ஆகியவற்றின் சார்பில் ரூ.24 கோடியே 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் முடிவடைந்துள்ள 844 திட்ட பணிகளை திறந்து வைத்தார்.

    மேலும், நிகழ்ச்சியில், வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, ஊரக புத்தாக்க திட்டம், கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 15 ஆயிரத்து 65 பயனாளிகளுக்கு ரூ.72 கோடியே 81 லட்சத்து 84 ஆயிரத்து 777 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதிக்கு இளநிலை உதவியாளர் பணி ஆணையினை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து ஆய்வு கூட்ட அரங்கிற்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் கலெக்டர் வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்கினார்.

    தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்தார். மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கதர்கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் டாக்டர் மணிகண்டன், பரமக்குடி சதன்பிரபாகர், திருவாடானை கருணாஸ், அறந்தாங்கி ரெத்தினசபாபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்.பி.அன்வர்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×