search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆஸ்பத்திரியில் மாணவன் பலி - குமரியில் டாக்டர் கைது

    அருமனை அருகே மாணவன் இறந்த சம்பவத்தில் டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருமனை:

    அருமனை அருகே கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், தொழிலாளி. இவருடைய மகன் அபினேஷ் (வயது 12), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சில நாட்களுக்கு முன்பு அபினேசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பெற்றோர் கடையாலுமூடு சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் குறையாததால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அபினேஷ் திடீரென இறந்தான். அவரது உடலை பரிசோதனை செய்த போது கொரோனாவில் இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையே தவறான சிகிச்சை காரணமாக மாணவன் இறந்ததாக பெற்றோரும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இதனால், விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கடையால் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவனுக்கு சிகிச்சை அளித்தது ஓமியோபதி டாக்டர் லூக்கா (46) என்பதும், அவர் அலோபதி சிகிச்சை அளித்ததும், போதிய வசதி இல்லாமல் மாணவனை உள் நோயாளியாக அனுமதித்து இறப்புக்கு காரணமாக இருந்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே டாக்டர் லூக்கா தலைமறைவானார். அவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து டாக்டரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கேரளா எல்லையான பனச்சமூடு அருகே லூக்கா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று லூக்காவை கைது செய்தனர். பின்னர், அவரை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×