search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நோய் தாக்குதலில் இருந்து காய்கறி பயிர்களை காப்பது எப்படி? வேளாண் அதிகாரிகள் அறிவுரை

    மழைக்காலத்தில் நோய் தாக்குதலில் இருந்து காய்கறி பயிர்களை காப்பது எப்படி? என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
    திருப்பூர்:

    பல்லடம் பகுதியில் காய்கறி பயிர்கள் மற்றும் பழப் பயிர்கள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. சமீபத்தில் பெய்துவரும் மழை காரணமாக இந்தப் பயிர்கள் அதிகளவில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன.

    குறிப்பாக பந்தல் காய்கறிகளான பாகற் காய், பீர்க்கங்காய் மற்றும் தக்காளி, கத்தரி, வெங்காயம், அவரை ஆகிய பயிர்கள் நோய் மற்றும் பூச்சிகளால் தாக்கப்பட்டு அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து பல்லடம் கணபதிபாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் டாக்டர் ஆனந்தராஜா, டாக்டர் கவிதா ஆகியோர் கொண்ட குழு காய்கறி பயிர்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது:- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக காய்கறி பயிர்களை பாக்டீரியா வாடல் நோய், புகையிலை தேமல் நோய் மற்றும் தேமல் நோய் ஆகியவை அதிகமாக தாக்குகின்றன. இவை மழை நீரில் எளிதில் வயல்களில் பரவி பயிர்களை பாதிக்கின்றன.

    பந்தல் காய்கறிகளைத் தாக்கும் சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய் மற்றும் தேமல் நோய் ஆகியவை அதிகமாக உள்ளன. வாடல் நோயின் தாக்கம் நூல் புழுக்களால் அதிகமாகிறது. அஸ்வினி போன்ற சார் உறிஞ்சி பூச்சிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விதைக்கும் முன்பே விதைகளை உயிரிகள் நுண்ணுயிர்களான டிரைக்கோடெர்மா விரிடி, பர் பியூரி யோசியம் லீலா சினம் அல்லது கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். வயலைச் சுற்றிலும் மஞ்சள் நிற பூக்களை கொண்ட கேந்தி, சணப்பை ஆகியவற்றை பயிரிட வேண்டும். பயிர் சுழற்சி முறையை கட்டாயம் பின்பற்றுவதால் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற முடியும்.

    வெட்டப்பில் சல்பர் கரைசலை அல்லது மேன்கோசெப் கரைசல் 3 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மோனோ குரோட்டா பாஸ் அல்லது இமிடக்ளோபிரிட் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். நூல் புழுக்களை கட்டுப்படுத்த கேந்தி செடியை ஊடு பயிராகவும் வரப்பு பயிராக வும் இடவேண்டும். பொக்கோனியா கிளாமி டோஸ் போரியா என்ற பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றையும் பயன்படுத்தவேண்டும்.

    வயலில் நீர் தேங்காதவாறு வடித்தல் மிகவும் அவசியமாகும். இதனால் வேர் சம்பந்தப்பட்ட நோய்களை கட்டுப்படுத்தலாம். பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து காய்கறி மற்றும் தோட்டக்கலை பயிர்களை மேற்கண்ட முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு பயிர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளுக்கும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×