search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் உள்ள பூச்சந்தை நேற்று முதல் செயல்பட்டது. அங்கு பூ விற்பனை நடைபெற்ற காட்சி.
    X
    தஞ்சையில் உள்ள பூச்சந்தை நேற்று முதல் செயல்பட்டது. அங்கு பூ விற்பனை நடைபெற்ற காட்சி.

    தஞ்சையில் பூச்சந்தை திறப்பு- வியாபாரிகள் மகிழ்ச்சி

    கொரோனா முழு ஊரடங்கால் பூட்டப்பட்ட தஞ்சை பூச்சந்தை திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் பூச்சந்தை உள்ளது. இது 100 ஆண்டு பழமையானது. இங்கு 35 மொத்த வியாபார கடைகள் உள்ளன. சந்தைக்கு வெளியே 20-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீன்மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. அதேபோல் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் பூச்சந்தையும் மூடப்பட்டது. தற்காலிகமாக அண்ணாநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பூச்சந்தை செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தமிழகஅரசு அனுமதி அளித்தது. அதேபோல் கடைகள் திறக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பூச்சந்தையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பூச்சந்தையை திறக்க கலெக்டர் கோவிந்தராவ் அனுமதி அளித்தார்.

    அதன்படி 174 நாட்களுக்கு பிறகு பூச்சந்தை நேற்றுகாலை திறக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வழக்கம்போல் பூக்கள் பூச்சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. மக்களும் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கி சென்றனர். வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘கோவில்கள் திறக்கப்பட்டாலும் பூஜை பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில்களில் அர்ச்சனை நடைபெற்றால் பூ வியாபாரம் இன்னும் அதிகஅளவில் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளிக்க வேண்டும்’ என்றனர்.

    பூச்சந்தைக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×