search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    அருப்புக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி

    அருப்புக்கோட்டையில் புகாரை விசாரிக்க சென்றபோது போலீஸ் இன்ஸ்பெக்டரை காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் (வயது 40), ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவர் தொழில் விசயமாக பல்வேறு பகுதிகளுக்கு காரில் சென்றுவருவது வழக்கம். இவரிடம் கோட்டைபட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (25) டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று நல்லேந்திரன் பத்திரப்பதிவுக்காக காரில் அருப்புக்கோட்டை சென்றார். அவர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்குள் இருந்தபோது டிரைவர் நந்தகுமார் செல்போனில் அழைத்துள்ளார்.

    தன்னை சிலர் காருடன் கடத்துவதாகவும், ரூ.30 லட்சம் கேட்பதாகவும் நந்தகுமார் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நல்லேந்திரன், அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் உடனடியாக காருடன் கடத்தப்பட்ட நந்தகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆலடிப்பட்டி பகுதியில் போலீசார் சென்றபோது எதிரே கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட கார் வந்ததை பார்த்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி காரை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக வந்தது. மோதுவதுபோல் கார் வந்ததால் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் துள்ளிக் குதித்து தப்பினார். அதன் பிறகும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. காரில் டிரைவர் நந்தகுமார் மட்டுமே இருப்பதை அறிந்த போலீசார் ஜீப்பில் காரை விரட்டிச்சென்றனர்.

    கல்லூரணி பகுதியில் போலீஸ் ஜீப் முன்சென்று காரை மறித்து நின்றது. அப்போது காரில் இருந்த நந்தகுமார் சாலையில் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். டிரைவர் நந்தகுமார்தான் பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தல் நாடகம் ஆடி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×