search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் வகுப்பு
    X
    ஆன்லைன் வகுப்பு

    தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை- வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

    ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
    சென்னை:

    கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடிக்கிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சரண்யா, விமல், பரணீஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடுவதாகவும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டன.

    விதிகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு நீதிபதிகள் தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக அரசின் விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஆன்லைன் வகுப்பு நேரத்தை பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும், பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் இருக்கவேண்டும், மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


    Next Story
    ×