search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    ஊரடங்குக்கு முந்தைய நாளில் குமரியில் களை கட்டிய மது விற்பனை

    குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2½ கோடி முதல் அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    பண்டிகை காலங்களில் வழக்கமாக நடைபெறும் விற்பனையை விட டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். முன்கூட்டியே மதுவை வாங்கி மதுபிரியர்கள் பண்டிகை காலத்தை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

    இந்தநிலையில் கொரோனா தொற்று காலமான தற்போது, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முழு ஊரடங்கு நாளில் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பால் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை.

    இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளில் சனிக்கிழமைதோறும் அளவுக்கதிகமான கூட்டம் இருப்பதோடு, அதிக அளவில் விற்பனையும் நடைபெறுகிறது. பண்டிகை காலத்தை விட மதுபிரியர்கள் மதுவை போட்டி போட்டு வாங்கிச் செல்கிறார்கள். இதேபோல் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் மது விற்பனை படுஜோராக நடந்தது.

    பலர் தங்களுக்கு தேவையான மதுபானங்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சிலர் பெட்டி, பெட்டியாக மதுபானங்களை தூக்கிச் சென்றதையும் காண முடிந்தது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5½ கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், பீர் வகைகளைக் காட்டிலும் மதுபான வகைகள் தான் அதிகளவில் விற்பனை ஆகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×