search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணத்தை பறிகொடுத்த டாஸ்மாக் ஊழியர்கள் சிவக்குமார், ராமலிங்கம், ராஜேந்திரன்.
    X
    பணத்தை பறிகொடுத்த டாஸ்மாக் ஊழியர்கள் சிவக்குமார், ராமலிங்கம், ராஜேந்திரன்.

    பரமத்திவேலூர் அருகே மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3½ லட்சம் கொள்ளை

    பரமத்திவேலூர் அருகே மிளகாய் பொடியை தூவி டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3½ லட்சத்தை கொள்ளை யடித்து சென்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வேலகவுண்டம்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதில் மேற்பார்வையாளராக வேலகவுண்டம்பட்டியை அடுத்த புத்தூரை சேர்ந்த ராமலிங்கம் (வயது 41) என்பவர் பணிபுரிந்து வருகிறார். விற்பனையாளர்களாக நாவலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (44), நாமக்கல்லை அடுத்த காதப்பள்ளியை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், நேற்று முன்தினம் கடையில் அதிகபடியான கூட்டம் காணப்பட்டது.

    மதுபான வகைகளும் அதிகளவில் விற்பனையானது. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 10 வசூலானது. இரவு 9 மணி அளவில் டாஸ்மாக் கடையில் வசூலான அந்த பணத்தை மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஒரு பையில் எடுத்துக்கொண்டு கடைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். சிவக்குமாரும், ராஜேந்திரனும் கடையை பூட்டிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ஊழியர்கள் 3 பேர் மீதும் தூவினார்கள். இதில் நிலைக்குலைந்த ஊழியர்கள் சுதாரிப்பதற்குள், திடீரென மேற்பார்வையாளர் ராமலிங்கத்தின், இடது கையை கத்தியால் வெட்டி விட்டு, அவர் கையில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 10-யை பறித்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் மேற்பார்வையாளர் ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிளகாய் பொடியை வீசியும், கத்தியால் தாக்கியும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×