search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பட்டு ஏரியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு மீன்களை பிடித்ததை படத்தில்காணலாம்
    X
    கல்பட்டு ஏரியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு மீன்களை பிடித்ததை படத்தில்காணலாம்

    விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா - பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு

    விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டது. இவை நன்கு வளர்ந்த நிலையில் மீன்பிடிக்க பொதுப்பணித்துறையினர் குத்தகை முறையில் ஏலம் விட்டனர்.

    இந்த ஏலத்தை எடுத்த குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தார். அவரது குத்தகை காலம் முடிவடைந்தததும் பொதுமக்கள் ஏரியில் இறங்கி மீன்பிடிப்பதற்காக மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கால் மீன்பிடி திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த சூழலில் நேற்று திடீரென தடையை மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கல்பட்டு, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, தெளி, சிறுவாக்கூர், அருளவாடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏரிக்குள் இறங்கி கெண்டை, ஜிலேபி, கட்லா, ரோகு, கெழுத்தி உள்ளிட்ட மீன்களை போட்டி, போட்டு பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இதுபோன்று ஊரடங்கை மீறி கூட்டமாக மீன்பிடி திருவிழாவை நடத்தக்கூடாது என்றும், உடனடியாக கலைந்து செல்லும்படியும் ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர். 

    இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்லாததால் போலீசார், ஏரிக்குள் இறங்கி அவர்களை விரட்டியடித்தனர். உடனே பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×