search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    சட்டத்தின் ஆட்சிதானா இது?... அணைக்கரை முத்து உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி உயிரிழந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாத்தான்குளம் கொடூர நிகழ்வின் ரத்தச் சுவடுகள் காயாத நிலையில் இன்னொரு அதிர்ச்சி செய்தி தாக்கியிருக்கிறது. தென்காசி வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான அணைக்கரை முத்து என்பவர் ஜூலை 22ம் தேதி இரவு 11 மணியளவில் சட்டை அணியவும் அவகாசம் தராமல் வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர் கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார்.

    தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா?

    முத்துவின் உடலில் காயங்கள் இருப்பதை அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டியும், குடும்பத்தினர் முன்னலையில் உடல் கூராய்வு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டும், இரவோடு இரவாக உடல் கூராய்வு நடத்தப்பட்டது ஏன்?

    தமிழக அரசின் சார்பில் இழப்பீட்டு நிதி அறிவிக்கப்பட்டு, வனத்துறையினரின் அத்துமீறலையும், அதற்கேற்ப காவல்துறை செயல்பட்டிருப்பதையும் மறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? 

    கொடூர உயிர்பறிப்பு குறித்து மாநில மனித உரிமை ஆணையத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா புகார் கடிதம் அளித்திருக்கிறார்.

    விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக மனித உரிமைகளை மீறி அழைத்துச் செல்லப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட அணைக்கரை முத்துவின் குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைத்திடவேண்டும். நீதிக்கான சட்டப்போராட்டத்தில் திமுக துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×