search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

    நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி - அரசு ஊழியர்கள் 2 பேர் மீது கலெக்டரிடம் புகார்

    துறையூரில் நுண் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அரசு ஊழியர்கள் இருவர் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
    திருச்சி:

    கரூர் மாவட்டம், சூரியனூர் தாலுகா மேலப்பட்டியை சேர்ந்தவர் வைரபெருமாள் (வயது 39). இவரது மனைவி திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வைரபெருமாள், அவரது மனைவி மற்றும் சில ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு வைரபெருமாள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    திருச்சியை அடுத்த அந்தநல்லூர் வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி வரும் ஒருவரும், எனது மனைவியும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்து வருவதால் நாங்கள் குடும்ப நண்பர்களாக இருந்து வந்தோம். இந்நிலையில் அந்த நபர், ஒரு நாள் என்னிடம் வந்து தானும் அவரது பள்ளி தோழரான கிராம நிர்வாக அதிகாரி ஒருவரும் சேர்ந்து நுண் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 500 ரூபாய் வட்டி மற்றும் 10 மாத இறுதியில் ஒரு லட்சம் ரூபாயை அப்படியே திருப்பி தருவதாகவும், இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இருப்பதாகவும் கூறினார். நானும் அவர் கூறியதை உண்மை என நம்பி விவசாயத்தின் மூலம் எனக்கு கிடைத்த வருமானம் மற்றும் எனது மனைவியின் சம்பள பணம் என மொத்தம் ரூ.47 லட்சத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 12 தவணைகளாக செலுத்தினேன்.

    ஆனால் எனக்கு அவர்கள் பேசியபடி பணம் தரவில்லை. ரூ.3 லட்சம் மட்டுமே வட்டி பணம் கொடுத்தார்கள். அதன் பின்னர் பணம் எதுவும் தரவில்லை. நான் அசல் பணத்தை கேட்டபோது ஆசிரியர் பயிற்றுனர், அவரது மனைவி, மகன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி எல்லோரும் சேர்ந்து என்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். எங்களைப்போலவே துறையூர் பகுதியில் உள்ள ஆசிரியர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதேபோல், அதே நிறுவனத்தில் ரூ.40 லட்சம் பணம் கட்டி ஏமாற்றமடைந்த மற்றொரு ஆசிரியர் உள்பட 10 பேர் தனித்தனியாக மனு கொடுத்தனர்.
    Next Story
    ×