search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகழாய்வு
    X
    அகழாய்வு

    கயத்தாறு அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு - அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

    கயத்தாறு அருகேயுள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகிலுள்ள ராஜாபுதுக்குடி என்ற பழமையான கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை மையமாக கொண்டு முன்பு குறுநில மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகிறது. இதனால் தான் இந்த ஊருக்கு ராஜாபுதுக்குடி என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

    இங்குள்ள வெயிலாச்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஊரணியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தங்க கொழுக்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த கொழுக்கள் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு நடத்த பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. ஆனால் அகழாய்வு பணி நடக்கவில்லை.

    அகழாய்வு


    இந்த நிலையில் ராஜாபுதுக்குடியிலுல் சிற்றாறு கால்வாய்க்கு கீழ்புறம் தனியார் நிறுவனம் சார்பில் ஒரு பணிக்காக சில தொழிலாளர்கள் மூலம் குழி தோண்டப்பட்டு உள்ளது. அந்த குழியில் முதுமக்கள் தாழி இருந்துள்ளது. இதன் விவரம் அறியாத தொழிலாளர்கள் முதுமக்கள் தாழியை உடைத்து விட்டனர். மேலும் அந்த இடத்தில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய சில அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

    இதை அறிந்த தமிழக அனைத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமையில் பொதுமக்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உடைந்த நிலையில் கிடைத்த முதுமக்கள் தாழியின் பாகங்கள் மற்றும் அரிய பொருட்களை சேகரித்து பாதுகாப்பாக வைத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் கயத்தாறு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அருமைராஜ் கூறுகையில்,‘ ராஜாபுதுக்குடி பகுதியில் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க பகுதி இது. இந்த பகுதியில் அகழாய்வு ஆராய்ச்சி செய்தால் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறியலாம். ஏற்கனவே தொல்லியல்துறைக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளோம்.

    ஆனால், அத்துறையினர் இப்பகுதியில் அகழாய்வு ஆராய்ச்சி மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழி மற்றும் அரிய பொருட்கள் குறித்த தகவல்களுடன் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு இப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை அனுப்பியுள்ளோம்’ என தெரிவித்தார்.

    பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று மாலையில் கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் காசிராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் தாசில்தார் கூறுகையில்,‘இது தொடர்பாக தொல்லியல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள்’ என தெரிவித்தார்.
    Next Story
    ×