search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    பழுப்பு நிற முட்டைகளை நாட்டுக்கோழி முட்டை என்று ஏமாற்றி விற்பனை- அதிகாரிகள் ஆய்வு

    கடைகளில் பழுப்புநிற முட்டைகளை நாட்டுக்கோழி முட்டை என்று ஏமாற்றி விற்பனை நடப்பதை தொடர்ந்து முட்டை பண்ணைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை பாதுகாப்பு அதிகாரிகள் மணி, தங்கவேல், கேசவராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள முட்டை விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தினார்கள்.

    ஆய்வின்போது வெள்ளை மற்றும் அடர் பழுப்பு நிற முட்டை பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதில் வெள்ளை நிற முட்டை ஒன்று ரூ.5-க்கும், பழுப்பு நிற முட்டையை நாட்டுக்கோழி முட்டை என்று கூறி ரூ.10-க்கும் விற்பனை செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து பல்லடம் மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள முட்டை உற்பத்தி பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    முட்டை உற்பத்தி பண்ணைகளில் இரண்டு விதமான முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகிறது. சில கோழிகள் வெள்ளை நிற முட்டையும், சில கோழிகள் பழுப்பு நிற முட்டைகளும் இடுகின்றன. 2 முட்டைகளும் ஒரே வகையானது. பண்ணைகளில் இரு நிற முட்டைகளையும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. கடைக்காரர்கள் பழுப்பு நிறத்தில் உள்ள முட்டைகளை நாட்டுக்கோழி முட்டை என்று கூறி மக்களின் அறியாமையை பயன்படுத்தி ரூ.10 முதல் ரூ.25 வரை முட்டையை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறும்போது, இதுபோன்ற முட்டை சுமார் 55 முதல் 60 கிராம் எடை கொண்டதாகவும் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். நாட்டுக்கோழி முட்டை எடை 30 முதல் 35 கிராம் அளவில் இருக்கும். மஞ்சள் கரு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். முட்டையின் ஒடு கடினமாகவும் இருக்கும்.

    எனவே பொதுமக்கள் பழுப்பு நிற முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகள் என நினைத்து வாங்கி ஏமாற வேண்டாம் என்றார்.
    Next Story
    ×