search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    புதுமாப்பிள்ளைக்கு கொரோனா பரிசோதனை - கடைசி நேரத்தில் நடந்த திருமணம்

    சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடைசி நேரத்தில் திருமணம் நடந்தது.
    நெல்லை:

    தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இறப்பும் அதிகரித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு இ-பாஸ் மூலம் வருபவர்களுக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டன் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்திற்காக சென்னையில் இருந்து புதுமாப்பிள்ளை, அவருடைய உறவினர்கள் என மொத்தம் 6 பேர் வருவதற்கு இ-பாஸ் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களுக்கு 13-ந்தேதி தான் அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச்சாவடிக்கு வந்தனர். அங்கு அவர்கள் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    நேற்று காலை 6 மணி வரை அவர்களுக்கு பரிசோதனை முடிவு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார், அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். உடனே அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு தகவலை தெரிவித்து பரிசோதனை முடிவை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். அதன்பிறகு காலை 8.30 மணிக்கு பரிசோதனை முடிவு வந்தது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இருந்தாலும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் என்பதால், மாப்பிள்ளை வீட்டார் கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் இருந்து 9.05 மணிக்கு புறப்பட்டு நேரடியாக திருமணம் நடைபெறும் இடத்திற்கே வந்தனர். அங்கே அவர்கள் 10 மணிக்குதான் வந்து சேர்ந்தனர். 10.30 மணி வரை தான் நல்லநேரம் என்பதால், உடனடியாக பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டினார். முகூர்த்த நேரம் 9.15 மணியில் இருந்து 10.30 மணி வரை என்பதால் சரியான நேரத்தில் மாப்பிள்ளை வந்ததும், திருமணம் நடந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. இருந்தாலும் புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையால் திருமண வீடு பரபரப்புடன் காணப்பட்டது.
    Next Story
    ×