search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கரூர் வந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை

    சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் கரூர் வந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம், தளவாபாளையம் பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் சென்னையில் தங்கி ஒரு தனியார் கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில், சென்னை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல வாலிபர் முடிவு செய்தார். அதன்படி சென்னையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அவரது தங்கையை அழைத்து கொண்டு கரூர் வழியாக சொந்த ஊருக்கு கடந்த 6-ந்தேதி இரவு வந்து விட்டார்.

    இதுகுறித்து வாங்கல் சுகாதாரத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி சுகாதாரத்துறையினர் அந்த வாலிபர் வீட்டிற்கு வந்து, அவருக்கும், அவரது தங்கைக்கும் ரத்தம், சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த வாலிபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறையினர் ஓட்டி சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று அந்த வாலிபருக்கு சளி, இருமல் இருப்பதாக வாங்கல் சுகாதாரத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் வீட்டிற்கு சுகாதாரத்துறையினர் வந்து மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறினர். அதற்கு அந்த வாலிபர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆம்புலன்ஸ் மூலம் அவரை, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக்கு பிறகு தான் வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அந்த வாலிபர் கரூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×