search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஒருதலைக்காதல் விவகாரத்தில் ரவுடி கொலை- 6 பேர் கைது

    பெரம்பலூரில் ஒருதலைக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்க லம் கே.கே.நகரை சேர்ந்த நாராயணன் மகன் கபிலன் (வயது 27). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், பணம் அபகரித்தல், அடிதடி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    நேற்று இரவு பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் பொதுப்பணித்துறை அலுவலகம் பின்புறமுள்ள வி.ஏ.ஓ. அலுவலகம் அருகில் உள்ள காட்டு பகுதியில் கபிலன் உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவரை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தீவிரமாக விசாரித்தனர்.

    விசாரணையில் துறைமங்கலம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுப்பிரமணியன் (48), அவரது மனைவி தனலட்சுமி (40) மற்றும் மகன் குணசேகரன் (17), மருமகன் அரவிந்த் உள்பட 10 பேர் சேர்ந்து கபிலனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் சுப்பிரமணியன், தனலட்சுமி, குணசேகரன், அரவிந்த் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கபிலன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கபிலனும், சுப்பிரமணியனும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர். சுப்பிரமணியன் ரியல் எஸ்டேட் மற்றும் சென்டிரிங் தொழில் செய்து வந்தார். அவருக்கு ரோகிணி, லாவண்யா, திவ்யா என்ற 3 மகள்களும், குணசேகரன் என்ற மகனும் உள்ளனர். இதில் ரோகிணியை அரவிந்த் திருமணம் செய்துள்ளார்.

    2-வது மகளான லாவண்யாவை கபிலன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்குமாறு லாவண்யாவை கபிலன் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இது பற்றி லாவண்யா அவரது பெற்றோரிடம் கூறவே, சுப்பிரமணியனின் மகன் குணசேகரன் மற்றும் மருமகன் அரவிந்த் ஆகியோர் ஒரு முறை கபிலனை சந்தித்து லாவண்யாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகாரும் செய்தனர். அதன்பேரில் போலீசார் கபிலனை கைது செய்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் லாவண்யாவிடம் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

    நேற்று அப்பகுதியில் குணசேகரன் நிற்கும்போது அவரிடம் சென்று தகராறு செய்ததுடன், குணசேகரனை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து லாவண்யாவிடம் தகராறு செய்துள்ளார்.

    தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், குணசேகரன், அரவிந்த் மற்றும் உறவினர்கள் சிலர் சேர்ந்து கபிலனை சரமாரி தாக்கினர். இதில் கபிலன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை பெரம்பலூர் துறைமங்கலம் வி.ஏ.ஓ. அலுவலகம் அருகில் போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அங்கு கபிலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒருதலைக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×