search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி
    X
    காசி

    காசியிடம் மீண்டும் போலீசார் விசாரணை

    பெண்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் காசியிடம் மீண்டும் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணை முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர், தங்களை ஆபாச படம் எடுத்து அதை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ஏற்கனவே 3 நாட்கள் காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த நண்பர் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்த புகாரின்பேரில் விசாரிப்பதற்காக, காசியை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதனையடுத்து காசியை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நேற்று முன்தினம் கோர்ட்டு அனுமதி அளித்தது. உடனே காசியை மகளிர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலில் பட்டதாரி இளம்பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, டாக்டர், என்ஜினீயர் உள்ளிட்டோர்தான் இடம் பெற்று இருந்தனர். புதிதாக சிறுமி ஒருவர் புகார் கொடுத்து இருப்பதால் காசி ஏராளமான சிறுமிகளிடமும் அத்துமீறி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே காசியிடம் 6 நாட்கள் காவலில் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை முடிவில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காசி விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், காசி மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒரு சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காசியை காவலில் எடுத்துள்ளோம். தற்போது வரை காசி மீது கூடுதல் புகார்கள் எதுவும் வரவில்லை. அப்படி புகார்கள் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே புகார் அளித்த சிறுமியுடன் காசி சுமார் 2½ ஆண்டுகள் பழகி உள்ளார். அன்பாக பேசியும், நெருங்கி பழகியும் இருக்கிறார். ஆனால் சிறுமியை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடவில்லை. அப்படி பணம் பறிக்க முயற்சி செய்த நேரத்தில்தான் காசி போலீசில் சிக்கி உள்ளார். எனவே போலீஸ் காவலில் விசாரணை முடியும் நேரத்தில் இன்னும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×