search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

    தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் குமுதா(வயது 39). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணியை முடித்த இவர் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு செவிலியரான பாலாமணி (44) என்பவருடன் ஸ்கூட்டரில் காவேரிப்பட்டணத்திற்கு சென்றார்.

    அப்போது விபத்தில் சிக்கி குமுதா உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாலாமணி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து காரணமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக செவிலியர்கள் கூறுகையில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் சமூக இடைவெளியுடன் கூடியதாக இல்லை. உணவும் முறையாக வழங்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து பணிக்கு வந்து செல்லும் செவிலியர்களுக்கு போதிய அளவில் வாகன வசதி செய்யப்படவில்லை. இதன்காரணமாகவே பணி முடிந்த பின் காவேரிப்பட்டணத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு 2 செவிலியர்கள் ஸ்கூட்டரில் சென்று உள்ளனர்.

    அப்போது ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். இனிமேலாவது இங்கு பணிபுரியும் செவிலியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உரிய முறையில் செய்து தர மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி உதவி கலெக்டர் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு செவிலியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள்.

    இதனிடையே சாலை விபத்தில் உயிரிழந்த செவிலியர் குமுதா உடலுக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் மலர்விழி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். 
    Next Story
    ×