search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    முடி திருத்துவோர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    நல வாரியத்தில் உறுப்பினர்கள் அல்லாத முடி திருத்துவோர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை அ.தி.மு.க. அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க. அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவித்தொகை உள்பட பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர். முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 14,667 நபர்களுக்கு 2 தவணைகளாக தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் முடித்திருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்காததால், நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அவர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளார்.

    அதன்படி, முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமும், பேரூராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தின் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் அந்த மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே முடி திருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 2 தவணையாக ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கியது போன்று, நலவாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×