search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல் தேக்கம்
    X
    செங்கல் தேக்கம்

    தேனி மாவட்டத்தில் ரூ.40 கோடி மதிப்புள்ள செங்கல் தேக்கம்

    ஊரடங்கு உத்தரவு காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள செங்கல் காளவாசல்களில் ரூ.40 கோடி மதிப்பிலான செங்கல்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. தேனி கருவேல்நாயக்கன்பட்டி, கொடுவிலார்பட்டி, குன்னூர், சொக்கத்தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, சாவடிப்பட்டி, லட்சுமிபுரம், தாமரைக்குளம், கைலாசபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், தேவாரம் போன்ற இடங்களில் அதிக அளவில் செங்கல் காளவாசல்கள் அமைந்துள்ளன.

    இந்த காளவாசல்களில் செங்கல் அறுத்தல், செங்கல் சுமத்தல், சூளை அடுக்குதல், வாகனங்களில் ஏற்றி இறக்குதல் போன்ற பணிகளை நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். வழக்கமாக பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை செங்கல் உற்பத்தி அதிக அளவில் இருக்கும் என்பதால், இந்த கால கட்டத்தில் கூடுதல் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. கட்டுமான பணிகள் நடக்காததால் காளவாசல்களில் செங்கல்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. சூளையில் சுடப்பட்ட செங்கல்கள் விற்பனையாகாததால் அறுக்கப்பட்ட பச்சை செங்கல்களை சுடவைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    செங்கல் காளவாசல்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. காளவாசல் தொழில்களை நம்பியுள்ள மக்கள் வேலையின்றியும், வருமானம் இன்றியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு காளவாசல்களிலும் லட்சக்கணக்கில் செங்கல்கள் தேக்கம் அடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 7 கோடி செங்கல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.40 கோடிக்கும் அதிகம். இதனால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டால் தான் தேக்கம் அடைந்துள்ள செங்கல்கள் விற்பனையாகும். அவ்வாறு விற்பனையானால் தான் அறுத்து வைத்துள்ள பச்சை செங்கல்களை சுடவைக்கவும், புதிதாக செங்கல் அறுக்கும் பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்த முடியும் என்ற நிலைமையும் உள்ளது.
    Next Story
    ×