search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போர்வெல்கள் மூடல் எதிரொலி- கரூரில் லாரி தண்ணீர் விலை கிடுகிடு உயர்வு

    கரூரில் அமராவதி ஆற்றில் இருந்த போர்வெல்கள் மூடப்பட்டதால் லாரி தண்ணீரின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    திருச்சி:

    தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த கேன் வாட்டர் கம்பெனிகள் ஐகோர்ட்டு உத்தரவால் மூடப்பட்டன. கரூர் மாவட்டத்தில் 8 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் இருந்த 10க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த போர்வெல்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கரூர் நகராட்சியை பொறுத்தமட்டில் 6,7 நாட்களுக்கு ஒரு முறைதான் வீடுகளுக்கு காவிரி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் பொதுமக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதில்லை. ஆகையினால் பெரும்பாலான மக்கள் லாரி தண்ணீரை நம்பியே இருக்கின்றனர். தற்போது அமராவதி ஆற்றில் இருந்த போர்வெல்கள் மூடப்பட்டதால் லாரி தண்ணீரின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் வரை 12,000 லிட்டர் லாரி தண்ணீருக்கு ரூ.1500 வசூலிக்கப்பட்டது. ரூ. 700 ஆக இருந்த 5000 லிட்டர் லாரி தண்ணீர் விலை தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி லாரி தண்ணீர் சப்ளை செய்யும் ஒருவரிடம் கேட்டபோது, அமராவதி ஆற்றங்கரையில் போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து விற்கும்போது போக்குவரத்து செலவு குறைவாக இருந்தது. அதனால் விலை குறைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது.

    இப்போது கரூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டளை பகுதிக்குச் சென்று அங்கு உள்ள பட்டா நிலத்தில் இருக்கும் போர்வெல் மூலம் லாரியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருகிறோம்.

    போர்வெல் உரிமையாளர்களுக்கு தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. போக்குவரத்து செலவும் உயர்ந்துவிட்டது. ஆகையால் தவிர்க்க முடியாத சூழலில் லாரி தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது கோடை காலம் வரை நீடிக்கும் என்றே தெரிகிறது. பொதுமக்களின் நலன் கருதி அமராவதி ஆற்றில் மூடப்பட்ட போர்வெல்களை திறந்துவிட அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×