search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    பொறியியல் கல்வியில் கட்டாய பாடமாக வேதியியல் நீடிக்க வேண்டும்- வைகோ

    பொறியியல் கல்வியில் கட்டாய பாடமாக வேதியியல் நீடிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொறியியல் கல்வியில், வேதியியல், கட்டாயப்பாடமாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெற்று இருக்கின்றது.

    அண்மையில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேதியியல் மதிப்பு எண்களைக் கணக்கிட வேண்டியது இல்லை எனத் தெரிவித்து இருக்கின்றது. கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பு எண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும் என்றும் கூறி இருக்கின்றது. அதேபோல, பொறியியல் கல்விக்கான பாடங்களை மாணவர்களின் விருப்பத் தேர்வுக்கு விட்டு விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த அறிவிப்பு, கல்வித் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மாணவர்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், மேனிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பயிற்றுவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வேலை வாய்ப்பினை இழக்கவும் வழிவகுத்து இருக்கின்றது.

    அவர்கள் வேளாண்மைப் பொறியியல், கட்டுமானம், வேதியியல் மற்றும் பல தொழில்நுட்பக் கல்விக்கு, மேனிலை வகுப்பில், வேதியியல் படித்து இருக்க வேண்டும்.

    ஆனால், புதிய அறிவிப்பின்படி, மாணவர்கள், வேதியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்து எடுப்பது கட்டாயம் அல்ல என்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது, வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெருந்தடையாக அமைந்து விடும்.

    வேதியியல் கட்டாயப் பாடம் என்பது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், வேதியியல் விருப்பப் பாடம் இல்லை என்றால், அதனால், கலைக்கல்லூரிகளும், பி.எஸ்சி வேதியியல் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

    எனவே, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு வெளியிட்டு இருக்கின்ற அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பொறியியல் கல்விக்கான சேர்க்கைகளுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியலை, கட்டாயத் தேர்வுப் பாடங்களாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    Next Story
    ×