search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காரிமங்கலத்தில் பள்ளி மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர் சிறைபிடிப்பு

    காரிமங்கலத்தில் நடுரோட்டில் மாணவர்களை அடித்ததால் தலைமை ஆசிரியரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியில் கல்வித்தரம் குறைந்ததால் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியது. மேலும் ஆசிரியர்களின் கோஷ்டி பூசலால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டதாக, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு இப்பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வேலை நேரத்தில் பள்ளியில் இல்லாததால் 11 ஆசிரியர்களுக்கு மெமோ கொடுத்தது, பச்சை மூங்கில் மரங்களை வெட்டியது உள்பட பல்வேறு புகார்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது கூறப்பட்டு வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளி ஆசிரியை ஒருவர் கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்ய முயன்று கைதான சம்பவமும் நடந்தது.

    இந்தநிலையில் காரிமங்கலம் அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் பாலக்கோட்டுக்கு சென்றார். மத்திய கூட்டுறவு வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர்களை அவர் வழிமறித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது தலைமை ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தலைமை ஆசிரியரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து வந்து தலைமை ஆசிரியரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் நடுரோட்டில் அடித்தது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×