search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
    X
    தொழில் நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    டிட்கோ- சிப்காட் தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

    ரூ.217 கோடி செலவில் டிட்கோ மற்றும் சிப்காட் தொழில் நிறுவனங்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    சென்னை:

    பொருளாதார முதலீட்டு வாய்ப்புகளை மையமாகக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு தூதுக்குழு பங்கேற்ற தொலை தொடர் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது.

    இதில் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை தமிழ் நாட்டில் மேற்கொள்ள உறுதியளித்துள்ளன. இவற்றில், 59 நிறுவனங்கள் ஏற்கனவே தமது வணிக உற்பத்தியை துவங்கிவிட்டன.

    மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

    இந்தியாவில் மிகப்பெரிய கழிவுநீரை நன்னீராக்கும் ஆலைகள், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெறும் வகையிலான பல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

    எனது தலைமையிலான உயர்மட்ட குழுவினர், அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்றதன் பயனாக 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் பல திட்டங்கள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக இன்று நான் துவக்கி வைத்த ஜோஹோ ஹெல்த் நிறுவனம் உறுதியளித்த முதலீட்டை விட 16 மடங்கு அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

    இன்று துவக்கி வைக்கப்பட்ட கொரியாவின் ஹெனான் மற்றும் ஜப்பானின் மிட்சுபா சைகால் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளது, தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழிற் சூழலுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

    இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்காவில் 250 ஏக்கர் பரப்பளவில் 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அமைக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இப்பூங்கா 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து சுமார் 7000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    போர்டு, ஹுண்டாய், யமஹா போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுவதற்கும், புதிய பல முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்வதற்கும், இங்குள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் சிறப்பான வழிகாட்டுதல்களையும், பெரும் பங்களிப்பையும் வழங்கி வருகின்றன.

    ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் தமிழ்நாடு அரசு கூட்டுப்பணி குழுக்களை ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி, அந்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து வருகிறது. பிரான்ஸ், அமெரிக்கா, கொரியா, ஆகிய நாடுகளின் தூதரகங்களும் தொழில் துறையுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன.

    மின்சார வாகனப் பூங்கா, வானூர்தி தொழில் பூங்கா, நிதி சேவைகளுக்கான நகரம், பாலிமர் பூங்கா, உணவுப் பூங்கா என முதலீடுக்குப் பல வாய்ப்புகள் இங்கு உள்ளன. ஆழ்கடல் மீன்பிடி திட்டங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சேலம் அருகே தலைவாசலில் அமைய உள்ள உலகத்தரத்திலான கால்நடை பூங்கா, பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பினை வழங்கும்.

    சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் விரைவில் அமைய இருக்கும் மெகா ஜவுளி பூங்காவிலும் நீங்கள் பங்கு பெறலாம், பயன் பெறலாம் என நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையிலும் அம்மாவின் அரசு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக, சென்னை இன்று இந்தியாவின் ஜாஸ் கேபிடள் ஆப் இந்தியா என்று கூறும் அளவிற்கு பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன.

    இன்று சென்னை, பெங்களூர் தொழில் பெருந்தட திட்ட செயலாக்கத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக தேசிய தொழில் பெருந்தட மேம்பாட்டுக் கழகத்திற்கும், தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியை கொண்டுள்ள இந்தியாவின் வளர்ச்சி, உலகத்தை புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்கினை வகித்து வருகிறது.

    எனவேதான், ஆசியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த இடமாக தமிழ்நாடு உயர்வடைய வேண்டும் என்று அம்மா நிர்ணயித்த இலக்கை நோக்கி, எனது தலைமையிலான அரசு பயணித்து வருகிறது.

    எங்களின் இந்த பயணத்தில், உங்கள் அனைவரின் அன்பையும், ஒத்துழைப்பையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×