search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பைக்கிடங்கில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி
    X
    குப்பைக்கிடங்கில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி

    பாலையம்பட்டி குப்பைக்கிடங்கில் தீ விபத்து

    அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை டிராக்டர்களில் ஏற்றி தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பாலையம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கு அருகே பாலையம்பட்டி துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவிலாங்குளம், கோபாலபுரம், ராமனுஜபுரம், பாலையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குப்பைக்கிடங்கில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் மின்வாரிய அலுவலகத்தினரும், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இங்கு கொட்டப்படும் குப்பைகளில் திடீரென தீ விபத்து ஏற்படும்போது, தீ மளமளவென அருகில் உள்ள மின்வாரியத்தை நோக்கி பரவுகிறது. இதனால் இப்பகுதியில் அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே இந்த நிலை வராமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கை சுற்றி சுவர் எழுப்பி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    Next Story
    ×